கோப்பு படம் 
செய்திகள்

அமைந்தகரையில் ஏ.டி.எம்.மில் நூதன முறையில் கொள்ளை முயற்சி - 2 வடமாநில வாலிபர்கள் கைது

அமைந்தகரையில் ஏ.டி.எம்.மில் நூதன முறையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

அண்ணாநகர்:

சென்னை அமைந்தகரை பெருமாள் கோவில் தெருவில் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. நேற்று அது திடீரென பழுதாகி ‘ஆப்’ஆகி இருந்தது. தகவல் அறிந்ததும் வங்கி மேலாளர் விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு காமிரா வீடியோக்களை ஆய்வு செய்தார். அதில் 2 வாலிபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்துள்ளனர்.

பின்னர் எந்திரத்தின் பின்புறம் சென்று அதை ஆப் செய்து விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அமைந்தகரை போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு காமிராவின் வீடியோ காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சாஹீர் (35), அப்துல் (30) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். இவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இதுபோன்று ஏ.டி.எம்.மில் நூதன முறையில் கொள்ளையடித்தது தெரியவந்தது.இதுபோன்ற கொள்ளையில் இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.