ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் ஆளும் அ.தி.மு.க. பிளவுப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரு அணிகளும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடியதால் தேர்தல் கமிஷன் அந்த சின்னத்தை முடக்கியது. இதனால் சசிகலா அணிக்கு அ.தி.மு.க. அம்மா அணி என்றும், ஓ.பி.எஸ். அணிக்கு அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என்றும் பெயரிடப்பட்டது.
சசிகலாவும் அவரால் நியமனம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனும் அடுத்தடுத்து ஜெயிலுக்கு சென்றதால் அ.தி.மு.க. அம்மா அணியானது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால் அந்த அணியை எடப்பாடி பழனிசாமி அணி என்று அழைக்கிறார்கள். டி.டி.வி. தினகரன் 21 எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த மாதம் 21-ந்தேதி எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. அம்மா அணியும், ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியும் ஒன்றாக இணைந்தன. இதையடுத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒன்றுபட்ட அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் 95 சதவீத நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்களது ஆதரவின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை மீட்க தீர்மானிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் இரு அணிகள் இணைப்புக்கு வழங்கப்பட்ட ஒப்புதல், சசிகலா - தினகரனை நீக்கியதற்கான சான்று, கட்சியை வழிநடத்த புதிய குழு ஏற்படுத்தப்பட்டது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் இரு அணி தலைவர்களும் டெல்லி சென்று தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். அதன் பேரில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே டி.டி.வி.தினகரன் அணியினர், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு தர வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் செப்டம்பர் 29-ந்தேதிக்குள் அனைத்து ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இரு அணிகளிடமும் அக்டோபர் 6-ந்தேதி முதல் விசாரணை நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியினர் பிரமாண பத்திரங்களை திரட்டும் பணியில் தீவிரம் காட்டினார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் 98 சதவீதம் பேரிடம் கடிதம் பெற்றனர். அதுபோல மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரிடமும் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது.
கையெழுத்து பெறப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தபோது பொறுப்புகளில் இருந்தவர்கள். ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டவர்கள்.
இவர்கள் அனைவரும் தங்களது பிரமாண பத்திரத்தில், ஜெயலலிதா மரணம் அடைந்தது முதல் செப்டம்பர் 12-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடந்தது வரை என்னென்ன நடந்தது என்பதை விளக்கமாக கூறியுள்ளனர். மேலும் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட 12 தீர்மானத்தை ஏற்பதாகவும் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளே கட்சியை வழி நடத்துவதால் இரட்டை இலை சின்னத்தை ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இந்த ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷனில் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
புதிய ஆவணங்களை தொகுத்து விட்டதால் எடப்பாடி பழனிசாமி அணியினர் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
அதே சமயத்தில் டி.டி. வி.தினகரனால் இன்னமும் திட்டமிட்டபடி ஆவணங்களை திரட்ட இயலவில்லை. ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட 2,300 பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களில் சுமார் 100 பேர்தான் அவருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. இதனால் அதன் ஆதரவாளர்களை நியமித்து புதிய பொதுக்குழு - செயற்குழுவை உருவாக்கும் முயற்சிகளில் தினகரன் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு கூடுதல் நாட்கள் தேவைப்படும் என்பதால் நேற்று தினகரன் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் 3 வார கால அவகாசம் கேட்டு தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தார். தினகரனின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்குமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ந்தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு அக்டோபர் 6-ந்தேதி விசாரணையைத் தொடங்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.