செய்திகள்

வாடிப்பட்டி அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து - 2 பயணிகள் உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பகுதியில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 2 பயணிகள் பலியாகினர்.

மாலை மலர்

வாடிப்பட்டி:

மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து ஓசூருக்கு இன்று அதிகாலை 2.45மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. தர்மபுரியை சேர்ந்த மோகன் (வயது 43) என்பவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். பஸ்சில் 28 பேர் பயணம் செய்தனர்.

வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி என்ற இடத்தில் வந்தபோது பஸ்சின் பின்புற டயரில் கருகிய வாடை வரவே டிரைவர் மோகன் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

பஸ் பழுதானதால் பஸ்சின் பின்புறம் சிவப்பு விளக்கை ஒளிரச்செய்து விட்டு பயணிகளிடம் மாற்று பஸ்சில் செல்வதற்கு அனைவரையும் கீழே இறங்கும் படிசொன்னார். உடனே பயணிகள் அனைவரும் இறங்கி பஸ்சின் ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து கரூருக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராத விதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் பின்புறம் நொறுங்கியது. மேலும் மோதிய வேகத்தில் அருகில் இருந்த பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து முன்பகுதி முழுவதும் உருக்குலைந்தது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்புறம் நின்று கொண்டிருந்த கிருஷ்ணகிரி பழைய பேட்டையை சேர்ந்த மாரியப்பன் மகன் சண்முக வேல் (வயது 38), கரூர் மாரிமுத்து மகன் கார்த்திக் (30)ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் சங்கரேஸ்வரி (31), அன்னலட்சுமி(54), ரங்கசாமி (58), சத்யராஜ் (24), முருகன்(44), ஆனந்த வள்ளி(46), உலகநாதன் (52) உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

சமயநல்லூர் போலீஸ் துணைசூப்பிரண்டு மோகன் குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தார்.