மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் ராஜபிரபு (வயது21), மனோகரன் மகன் சூர்யா (21). இவர்கள் தங்களது நண்பர்கள் சித்திரக்குமார், லட்சுமணன், தினேஷ்குமார், சரவணன் ஆகியோருடன் போடியில் ஆட்டோவை பழுது பார்க்க கொண்டு சென்றனர்.
வேலை முடிந்து மீண்டும் கோடாங்கிபட்டி திரும்பினர். போடி அருகே உள்ள சாலை காளியம்மன் கோவில் அருகே வந்தபோது பேரிகாடை வேகமாக கடந்துள்ளனர். அப்போது தேனியில் இருந்து தேவாரம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது ஆட்டோ மோதியதில் அப்பளம்போல் நொறுங்கியது.
இடிபாடுகளில் சிக்கி ராஜபிரபு, சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அவர்களின் நண்பர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பஸ்சில் வந்த பயணிகள் 7 பேர் காயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் நிலைய அலுவலர் பாலு தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.