பாகீரதிக்கு பொன்னாடை அணிவித்து கொல்லம் கலெக்டர் அப்துல்நாசர் பாராட்டு தெரிவித்த காட்சி 
செய்திகள்

தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 2 மூதாட்டிகளுக்கு ஜனாதிபதி விருது

கேரளாவில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பாகீரதி (105) , கார்த்தியாயினி (98) ஆகிய மூதாட்டிகளின் சாதனையை பாராட்டி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் மகளிர் தினவிழாவில் விருது வழங்க உள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளா 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாகீரதி என்ற 105 வயது மூதாட்டி தனது 10 வயதிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். தள்ளாத வயதை அடைந்த அவருக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி அதில் 70 சதவீத மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். இதன்மூலம் கேரளாவிலேயே அதிக வயதில் எழுத்தறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்ற சிறப்பை பெற்றார்.

இதுதொடர்பாக ரேடியோவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது பாகீரதியின் கல்வி ஆர்வத்தை பாராட்டி இதை அனைவரும் முன் மாதிரியாக ஏற்று நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேபோல கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த கார்த்தியாயினி என்ற 98 வயது மூதாட்டி 2018-ம் ஆண்டு எழுத்தறிவு தேர்வில் 98 மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

இந்த 2 மூதாட்டிகளின் சாதனைகளை பாராட்டி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வருகிற 8-ந்தேதி டெல்லியில் நடைபெறும் மகளிர் தினவிழாவில் விருது வழங்க உள்ளார். இதுதொடர்பான தகவல் அந்த மூதாட்டிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல்நாசர், பாகீரதி வீட்டிற்கு சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

இதுபற்றி கார்த்தியாயினி கூறும்போது, தான் இதுவரை விமானத்தை வானில் பறக்கும்போதுதான் பார்த்து உள்ளதாகவும், முதல்முறையாக விமானத்தில் சென்று ஜனாதிபதியிடம் விருது பெறுவதை பெருமையாக கருதுவதாகவும் தெரிவித்தார்.