கைது செய்யப்பட்ட நபர்கள் 
செய்திகள்

தொடரும் போலீஸ் ரெய்டு- பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்த 2 பேர் சிக்கினர்

கஞ்சா தடவிய ஜெல்லி உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்த 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்களைத் தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னணி நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவில் நடத்தப்பட்ட சோதனையின்போது போதைப்பொருட்களை விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எக்ஸ்டஸி மாத்திரைகள், எல்.எஸ்.டி (லிசர்ஜின் ஆசிட் டைஎதிலமைட்) மற்றும் கஞ்சா பூசப்பட்ட ஜெல்லி ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் இணை கமிஷனர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடந்து விசாரணை நடத்தப்படுகிறது. இதில் போதைப்பொருள் நெட்வொர்க் குறித்த தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.