செய்திகள்

டெல்லியில் சுகேஷ் ஆதரவு போலீசார் 2 பேர் கைது

பெங்களூருவில் சுகேஷ் சந்திரசேகரை சுதந்திரமாக நடமாட விட்டதாக எழுந்த தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், 2 பேரை கைது செய்தனர்.

இரட்டை இலை சின்னத்தை பெற டி.டி.வி.தினகரனுக்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் லஞ்ச பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர் (வயது 27). டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், கோர்ட்டு விசாரணைக்காக கடந்த 9-ந்தேதிக்கும், 16-ந்தேதிக்கும் இடையே பெங்களூரு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது சுகேஷ் சந்திரசேகர், பெங்களூருவில் சுதந்திரமாக நடமாடியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதில் டெல்லி ஆயுதப்படை போலீஸ் 3-வது பட்டாலியனை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், போலீஸ்காரர் நிதின் ஆகியோருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், அவர்கள் 2 பேரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததாக நேற்று தகவல்கள் வெளியாகின.

அவர்கள் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 7 போலீசாரை துணை போலீஸ் கமிஷனர் தியோதோஷ் கே.எஸ். சிங் பணி நீக்கம் செய்துள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது.