செய்திகள்

பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு மாணவனின் உடலை மீட்ட நிலையில் மற்றொரு மாணவனின் உடலை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

மேட்டுப்பாளையம்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அரசம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி, விவசாயி. இவரது மகன் குகன் ( வயது 21). கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஊத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கோகுல்ராஜ் (21). இவர்கள் 2 பேரும் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நண்பர்கள்.

இவர்கள் 2 பேரும் பவானி ஆற்றில் குளிப்பதற்காக நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் சிறுமுகை அருகே உள்ள பழத்தோட்டம் பகுதிக்கு வந்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளை பவானி ஆற்றின் கரையோரம் நிறுத்தி விட்டு ஆற்றில் இறங்கி குளித்தனர்.

தற்போது தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டு இருந்தது. இதனை பொருட்படுத்தாமல் 2 பேரும் ஆனந்தமாக குளித்தனர். அப்போது திடீரென 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். அங்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் 2 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள் மற்றும் 2 பேரின் ஆடைகளை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சந்தேகம் அடைந்தனர். இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பரிசல் காரர்கள் உதவியுடன் ஆற்றில் மாணவர்களின் உடலை தேடினர். ஆனால் இரவு வரை கிடைக்கவில்லை.

இதனையடுத்து இன்று காலை பரிசல் மூலமாக தேடினர். அப்போது ஆற்றில் பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த குகனின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோகுல்ராஜின் உடலை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.