கடல் அட்டைகள் பதுக்கியதாக கைதான 2 வாலிபர்களை படத்தில் காணலாம் 
செய்திகள்

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தூத்துக்குடி கடலோர குழும அதிகாரிகள் மற்றும் மன்னார் வளைகுடா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை மடத்தூர் பகுதியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த குடோனை சுற்றி வளைத்து அங்கிருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகள் மற்றும் கார், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிப்பட்டவர்கள் தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்த முருகன் (வயது 35), நெல்லையை சேர்ந்த ரவி (23) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் தூத்துக்குடி கடலோர குழும அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் எங்கிருந்து கடல் அட்டைகளை கொண்டு வந்து பதுக்கினார்கள் ? அவர்களுடன் தொடர்புடைய கடல் அட்டைகள் கடத்தும் கும்பல் எது? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.