செய்திகள்

ராமநாதபுரத்தில் ராணுவ வீரர் கொலை: சரண் அடைந்தவரின் உறவினர்கள் 2 பேர் கைது

ராமநாதபுரத்தில் நடந்த ராணுவவீரர் கொலை வழக்கில் சரண் அடைந்தவரின் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மகாசக்தி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 64). முன்னாள் ராணுவ வீரர்.

இவர் அதிகாலை 5 மணி அளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் நடை பயிற்சி சென்றார். அப்போது காரில் வந்த 2 வாலிபர்கள் சந்திரசேகரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த சந்திரசேகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த சில நிமிடங்களில் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சந்திரசேகரின் சம்பந்தியான பட்டணம்காத்தான் பிருந்தாவன் கார்டனை சேர்ந்த வீராசாமி, ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இவரது மகள் பவானிக்கும் சந்திரசேகரின் மகன் அபிசேக்குக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

10 மாதங்களுக்கு முன்பு பவானியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அபிஷேக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து வீராசாமி தனது உறவினர்களான வாலாந்தரவையை சேர்ந்த அருண்குமார் (25), சடையன் வலசையை சேர்ந்த அருண் பாண்டியன் (24) ஆகியோரிடம் முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மூவரும், சந்திரசேகரை வாக்கிங் சென்றபோது கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து வீராச்சாமியின் உறவினர்களான அருண்குமார், அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.