எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்பெற்று வியப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை அடுத்த குண்டிருசன்பாளையம் இப்பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி மாணிக்கம். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா, கீர்த்திகா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
கொங்கணாபுரம் அருகே உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில், 12-ம் வகுப்பு பயின்று வந்த இரட்டை சகோதரிகள் கார்த்திகா, கீர்த்திகா இருவரும் ஒரே மதிப்பெண்கள் (1117) பெற்று அசத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் உருவ அமைப்பில் மட்டும் இன்றி எண்ணத்திலும், செயலிலும் ஒற்றுமையாக இருந்த எங்களை இந்த மதிப்பெண் ஒற்றுமை மேலும் இருக இணைத்து விட்டதாக உணருவதாகவும், எதிர் வரும் காலங்களில் நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில், ஒரே மாதிரியான துறையில் உயர்கல்வி பயின்று அதிலும் சாதனை புரிவோம் என்றும் கூறினர்.