மறைந்த டிவி நடிகை சித்ரா, அவரது கணவர் ஹேம்நாத் 
செய்திகள்

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு

சித்ரா தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசாரே விசாரிக்க போலீஸ் கமி‌ஷனர் மகேஸ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹேம்நாத் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது.

இதற்கிடையே சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீயும் விசாரணை நடத்தினார். அவர் சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோர், ஓட்டல் ஊழியர்கள், படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களிடம் விசாரணை செய்தார்.

இதுபற்றிய விசாரணை அறிக்கையை அவர் பூந்தமல்லி உதவி கமி‌ஷனரிடம் சமர்பித்தார். இதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஆஷா மனோகர் என்பவரிடம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெ.ஜெ.நகர் போலீசார் ஹேம்நாத் மீது ஒரு வழக்கு பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது அந்த வழக்கு கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு கைது நடவடிக்கை பாய்ந்து உள்ளது. இதேபோல அவர் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக 2 பேரிடம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாகவும் ஹேம்நாத்திடம் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து சித்ரா தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசாரே விசாரிக்க போலீஸ் கமி‌ஷனர் மகேஸ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

எனவே சித்ரா வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கையில் எடுத்து உள்ளனர். விசாரணைக்கு பின்னர் சித்ரா வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேம்நாத் மீது ஏராளமான புகார்கள் எழுந்துள்ளதால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.