செய்திகள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆனது

புதிதாக 2 எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் மொத்தம் 20 பேர் தங்கி இருக்கிறார்கள்.

மாலை மலர்

அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து தினகரன் தரப்பினர் போர்க்கொடி உயர்த்தினார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் புதுவை ஓட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர். வெற்றிவேல் எம்.எல்.ஏ. தவிர, 18பேர் கடந்த 22-ந்தேதி புதுவை வந்தனர்.

முதலில் சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு ரிசார்ட் ஓட்டலில் தங்கினார்கள். நேற்று வரை அவர்களுக்கு ஓட்டல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து அங்கேயே தங்குவதற்கு ஓட்டல் அறைகள் கிடைக்கவில்லை.

இதனால் அந்த ஓட்டலை காலி செய்து விட்டு நேற்று மதியம் புதுவை நகரில் உள்ள சன்வே ஓட்டலுக்கு வந்தனர். 18 பேரும் அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இன்று அவர்கள் இருவரும் புதுவை அழைத்து வரப்பட்டனர். கலைச்செல்வன் எம்.எல்.ஏ. அதிகாலை 3 மணிக்கு புதுவை வந்து சேர்ந்தார். ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. காலை 7 மணியளவில் புதுவை வந்தார்.

இருவரும் நேராக ஓட்டலுக்கு சென்று தங்கினார்கள். அவர்களுக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.

புதிதாக 2 எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் மொத்தம் 20 பேர் தங்கி இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கி உள்ள ஓட்டல் உள்வளாகத்திலும், சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டலில் தங்கி இருப்பவர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

புதுவை சன்வே ஓட்டலில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஜக்கையன், ஏழுமலை ஆகியோர் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி.

புதுவையில் எப்போதுமே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து ஓட்டல் அறைகளும் புக் ஆகி விடும்.

இந்த வாரத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை இருந்ததால் 3 நாட்களும் புக் செய்து விட்டார்கள். நாளை மாலை அவர்கள் காலி செய்து சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.