ஓட்டலில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமு இன்று காலை கடற்கரையில் நடைபயிற்சி செய்த காட்சி 
செய்திகள்

புதுச்சேரியில் நெருக்கடி: டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் பயணமா?

புதுச்சேரியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கடியான சூழல் நிலவுவதால் அங்கிருந்து பெங்களூர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

புதுச்சேரி:

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்னவீராம்பட்டினம் வின்ட்பிளவர் ரிசார்ட் ஓட்டலில் தங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். அவர்களுக்கு மொத்தம் 20 அறைகள் பதிவு செய்யப்பட்டது. இன்று மதியம் வரை மட்டுமே இந்த அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஓட்டலில் பகல் 11 மணிக்கு ‘செக்அவுட் டைம்’ ஆகும். எனவே 11 மணிக்கு அவர்கள் அறையை காலிசெய்ய வேண்டும்.

புதுவையை பொறுத்தவரையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிவார்கள். இதனால் அனைத்து ஓட்டல்களிலும் இந்த இரு நாட்களிலும் அனைத்து அறைகளும் பதிவு செய்யப்பட்டு விடும்.

நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் ஆகும். இதனால் 3 நாள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. எனவே எல்லா ஓட்டல்களிலும் 3 நாட்கள் அறைகள் புக் செய்யப்பட்டு விட்டன.

இதேபோல் வின்ட்பிளவர் ஓட்டலிலும் ஆன்லைன் மூலம் அனைத்து அறைகளும் நாளை முதல் புக் ஆகி இருக்கின்றன. இந்த ஓட்டலில் தனி அறைகள், சொகுசு அறைகள், வில்லா, காட்டேஜ் என மொத்தம் 50 அறைகள் உள்ளன. அனைத்து அறைகளும் 3 நாட்களுக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே எம்.எல்.ஏ.க்களை வேறு ஓட்டலுக்கு செல்லும்படி ஓட்டல் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் புதுவையில் வேறு ஏதாவது ஓட்டல் கிடைக்குமா? என்று தேடிவருகிறார்கள்.

18 எம்.எல்.ஏ.க்களும் புதுவை வந்தபோது முதலில் வேறு ஒட்டல்களில் தான் தங்குவதற்கு முடிவு செய்து ஒவ்வொரு ஓட்டலாக அனுமதிகேட்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தங்குவதால் அரசியல் ரீதியாக வேறு பிரச்சனைகள் ஏற்படும் என கருதி பல ஓட்டல்கள் அவர்களுக்கு அறைகள் வழங்க மறுத்துவிட்டது. கடைசியில் இந்த ஓட்டலில் தங்கினார்கள்.

இப்போது அவர்கள் காலி செய்ய சொல்வதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் பெங்களூர் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.