செய்திகள்

எடப்பாடிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

தினகரன் துணை பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவையும், தினகரனையும் நிரந்தரமாக நீக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டி.டி.வி.தினகரன் நேற்று தஞ்சாவூர் சென்றிருந்தார்.

மரணம் அடைந்த அவரது மாமியார் படத் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தினகரன் சென்றிருந்த போதுதான், எடப்பாடி அணியினர் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.

இதையறிந்த தினகரன் ஆவேசம் அடைந்தார். எடப்பாடி அணியை கடுமையாக தாக்கி பேட்டி அளித்தார்.

அதன்பிறகு தஞ்சையில் டி.டி.வி.தினகரனை எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), உமா மகேஸ்வரி (விளாத்திக் குளம்), சுப்பிரமணியன் (சாத்தூர்) சுந்தர்ராஜன் (ஓட்டப்பிடாரம்) மாரியப்பன் கென்னடி (மானாமதுரை) தங்கத்துரை (நிலக்கோட்டை) பழனியப்பன் (பாப்பி ரெட்டிப்பட்டி), ஜக்கையன் (கம்பம்) கதிர்காமு (பெரியகுளம்) முத்தையா (பரமக்குடி) ரெங்கசாமி (தஞ்சாவூர்) ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அவர்கள் தினகரனுடன் ஆலோசித்தனர்.

இதன் பின்னர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில்பாலாஜி அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆவேசமாக கருத்துக்களை கூறினார். சசிகலா, தினகரன் ஆகியோரால்தான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டட்டும் பார்க்கலாம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதேபோல தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரும் எடப்பாடி அணிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

குடியாத்தம் எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபன் கூறியதாவது:-

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த கூட்டத்தில் தினகரன் துணை பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என எடுக்கப்பட்ட முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

நேற்று நடந்தது பொதுக் குழுவா, செயற்குழுவா அல்லது அமைச்சரவை, கூட்டமா? என்ன கூட்டம் என்பது தெரியவில்லை.

குறிப்பிட்ட நபர்கள் சேர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டப்படி செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தற்போதுள்ள ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இரு அணியை சேர்ந்தவர்களுடைய வற்புறுத்தலின் பேரில்தான் சசிகலா பொதுச்செயலாளராக இருக்க ஒப்புக்கொண்டார்.

கூவாத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் சகோதரர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என சசிகலா கேட்டுக் கொண்டதின் பேரில் தான் தற்போது அவர் முதல்-அமைச்சராக பதவி வகிக்கிறார். அவருக்காக சசிகலா எங்களிடம் சத்தியமே வாங்கினார். ஆனால் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த நன்றியை மறந்து விட்டார்.

பொதுச்செயலாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் நியமனம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.