அ.தி.மு.க. அணிகள் இண்டாகப் பிரிந்து, இரட்டை இலை சின்னத்திற்கு இரு அணிகளும் உரிமை கோரியதால், கடந்த ஆண்டு கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனையடுத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக சசிகலா, தினகரன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஒரு தரப்பாகவும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதற்காக பிரமாணப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், செப்டம்பர் 29-ம் தேதிக்குள் இரு தரப்பினரும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இரு அணிகளிடமும் அக்டோபர் 6-ந்தேதி முதல் விசாரணை நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.