தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நடந்து வருகின்றன. கட்சியையும், ஆட்சியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்துவார் என்றும் மற்றவர்களை பற்றி கவலை இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
ஆனால் கட்சியை வழிநடத்தும் இடத்தில் தான் இருப்பதாக அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும், இது குறித்த விவரங்களை வருகிற 4-ந்தேதி அறிவிக்க இருப்பதாகவும் தினகரன் அறிவித்து உள்ளார். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய டி.டி.வி. தினகரன் கொடுத்த 60 நாள் அவகாசம் வருகிற 4-ந்தேதி முடிவடைகிறது.
அவர் 5-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.முக. தலைமை கழகத்துக்கு வரப்போவதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது.
வாட்ஸ்-அப் குரூப் வைத்துள்ள அவரது ஆதரவாளர்கள் இந்த செய்தியை வைரலாக பரப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலருடன் ஆலோசனை நடத்தினார்.
இன்னொரு புறம் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள தினகரன் வீட்டுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தினமும் வந்து அவரை சந்தித்து வருகிறார்கள்.
இப்படி அடுத்தடுத்து அரசியல் பரபரப்பு தொற்றி இருக்கும் சூழ்நிலையில் தினகரன் இன்று மாலை பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி உடன் செல்கிறார். சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டு தினகரன் சார்பில் அவரது வக்கீல் ஒருவர் பரப்பனஅக்ரஹார பெண்கள் சிறை சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்.
சசிகலாவை தினகரன் சந்திக்க அனுமதி கிடைக்குமா? என்பது இன்று பிற்பகலில் தெரியும்.
இந்த நிலையில் தினகரன் இன்று காலை பெங்களூரு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனது உறவினர் பரத்தை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை சசிகலாவை தினகரன் சந்தித்து பேசுகிறார். வழக்கமாக இதற்கு முன்பு சிறப்பு அனுமதி பெற்று 40 நிமிடம் வரை அவர் சசிகலாவை சந்தித்து இருக்கிறார்.
கடந்த முறை சிறையில் கெடுபிடிகள் அதிகம் ஆனதால் சசிகலாவை தினகரன் சந்திக்க முடியாமல் திரும்பினார்.
எந்த கைதியை யார் பார்க்க வேண்டும் என்றாலும் 10 நிமிடம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.மெகரீத் உத்தரவிட்டு உள்ளார். இதனால் சசிகலாவை தினகரன் 10 நிமிடம் மட்டுமே சந்திக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.