இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூன் ஆகியோரை டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உள்ளது.
ஜாமீனில் விடுதலையாகும் தினகரன் வருகிற 5-ந்தேதி அல்லது 6-ந்தேதி பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். சந்திப்பின்போது 2 முக்கிய காரணங்களை அவர் சசிகலாவிடம் விளக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியை விட்டு விலகியதாக தினகரன் ஏற்கனவே அறிவித்தாலும் கட்சியின் சின்னமான இரட்டை இலையை மீட்க முயற்சி எடுத்ததால் சிறை செல்ல நேர்ந்ததை கூறி தொடர்ந்து அரசியலில் இருக்க சசிகலாவின் அனுமதியை பெற அவர் முயற்சி மேற்கொள்ளலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் ஜூன் 16-ந் தேதிக்குள் கட்சியின் சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் ஆவணங்கள் தாக்கல் செய்வது குறித்தும் தேர்தல் கமிஷன் விசாரணையின் போது அ.தி.மு.க. அம்மா அணியினர் வலியுறுத்த வேண்டிய விஷயங்கள் குறித்தும் அவர் சசிகலாவிடம் விவரிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
டெல்லி போலீசார் தினகரனை கைது செய்வதற்கு முன்பு தினகரன் பெங்களூரு வந்து சசிகலாவை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை சந்திக்க சசிகலா மறுத்து விட்டார்.