செய்திகள்

கட்சி பணியில் ஈடுபட தினகரனுக்கு தடை: ஆதரவாளர்கள் சந்திப்பு ரத்து

கட்சி சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் டிடிவி தினகரனை அழைக்காததன்மூலம், அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மாலை மலர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது புகார் கூறப்பட்டது.

இதனால் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தைக்கு தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணி நிபந்தனை விதித்தது. இதை ஏற்று தினகரனை அ.தி.மு.க. கட்சிப் பணியில் இருந்து ஒதுக்கி வைத்து இருப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையே ஜெயிலில் இருந்து விடுதலையான தினகரன் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அவரை எம்.எல்.ஏ.க்களும் சந்தித்துப் பேசி வந்தனர்.

அவர்கள் தினகரனுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் 122 எம்.எல்.ஏ.க் களில் 35 பேர் தினகரனை சந்தித்தார்கள். இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிப் பணியுடன் கட்சிப் பணிகளையும் கவனித்து வந்தார். இதனால் தினகரன் கட்சிப் பணியில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது.

இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆட்சியை நீங்கள் நடத்துங்கள். கட்சியை டி.டி.வி. தினகரன் பார்த்துக் கொள்ளட்டும் என்று வலியுறுத்தினார்கள்.

கட்சி சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும் என்றனர்.


ஆனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார்.

அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 21-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவை சேர்ந்த அன்வர்ராஜா எம்.பி. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தினகரன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த தினகரன் முடிவு செய்தார். நேற்று தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இன்று வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்க முடிவு செய்திருந்தார். இதுபற்றி கட்சி நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென்று இன்று நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியை டி.டி.வி. தினகரன் ரத்து செய்து விட்டார்.

கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இதுவரை அழைப்பு இல்லாத காரணத்தால் டி.டி.வி. தினகரன் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.