செய்திகள்

தேனி மாவட்டத்தில் பொதுக்கூட்டம்: கட்சிப்பணியில் தினகரன் தீவிரம்

அ.தி.மு.க. அணியின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டத்தை தேனியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மாலை மலர்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். இதனால் அவரால் கட்சி பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை சசிகலா நியமித்தார். இதன்படி தினகரன் கட்சி பணிகளில் தீவிரம் காட்டினார். அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று கட்சியின் முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இது அரசியல் களத்தில் தினகரனுக்கு முதல் சறுக்கலாக அமைந்தது.

இதற்கிடையே அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டைஇலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டுமென்றால் சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து கூறி வந்தனர். இதனை ஏற்று இருவரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட தினகரன் 34 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் கடந்த 3-ந்தேதி திகார் சிறையில் இருந்து விடுதலையானார். ஜெயிலில் இருந்து வெளிவந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. என்னை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்று கூறினார்.

கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டப் போவதாகவும் கூறினார். சென்னை திரும்பியதும் தினகரனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் தினமும் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்ததை அமைச்சர்கள் சிலர் ஏற்கவில்லை.


அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை கட்சியினர் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோ அணி திரண்டு சென்று தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் தினகரனுக்கு எதிராக பேசிய அமைச்சர்கள் அடங்கிப் போனார்கள்.

எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட 34 பேர் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரன் விடுதலையான போது திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் அவரை சந்தித்து ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று செந்தில்நாதன் (சிவகங்கை) வசந்தி முருகேசன் (தென் காசி) ஆகிய 2 எம்.பி.க்களும் சந்தித்து தங்களது ஆதரவை அளித்தனர். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் சசிகலா அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என 2 அணிகளாக அது உடைந்துள்ளது.

ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருவதால் தற்போது 3 அணிகளாக அ.தி.மு.க. மாறியுள்ளது. ஆட்சியை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார். கட்சியை தினகரன்தான் வழி நடத்திச் செல்வார் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனை உறுதிபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க தினகரன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநாடு போன்று பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும் அ.தி.மு.க. அம்மா அணியினர் தயாராகி வருகிறார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தினகரன் உரையாற்றுகிறார்.

இதன் மூலம் கட்சி பணிகளில் தினகரனை தீவிரமாக ஈடுபடவைப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் முழு மூச்சாக களமிறங்கி உள்ளனர். தினகரனும் கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் அதிரடி அரசியலில் குதிக்க உள்ளார்.

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான பின்னர் தினகரன் வெளியூர்களுக்கு சென்று அ.தி.மு.க.வினரை சந்திக்கவில்லை. அவர் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டத்தை தேனியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கு முன்னதாக தினகரன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கும் வருகை தர உள்ளார்.

இது தொடர்பாக தினகரனின் தீவிர ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்கதமிழ்ச் செல்வன் கூறியதாவது:-


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக் கூட்டத்தை தேனி மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறோம். இதில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். பொதுக்கூட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

கட்சிப்பணியில் டி.டி.வி. தினகரன் தீவிரமாக செயல்படும் விதமாக விரைவில் அவர் தலைமைக்கழகத்துக்கு வருவார். கட்சிப்பணிகளை கவனிப்பார். அவரால்தான் கட்சியை காப்பாற்ற முடியும். அப்போது கண்டிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-


கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மிக விரைவில் தலைமைக் கழகம் வரவேண்டும். அவர் வந்தால்தான் இந்த இயக்கம் சரியான பாதையில் செல்லும் என்பது தொண்டர்களின் விருப்பம்.

அவரைத் தவிர வேறு யாராலும் கட்சியை வழி நடத்த முடியாது. நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. நாட்டு மக்கள் மத்தியிலும் அவர் மீது ஒரு நல்லெண்ணம், மதிப்பு உருவாகி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எந்த சூழலிலும் பதட்டம் அடையாமல் இன்று உருவாகி உள்ள நெருக்கடியில் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற கவலையோடு ஒவ்வொரு அடியாக அளந்து எடுத்து வைக்கிறார்.

அவரை காயப்படுத்தும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் பேசினாலும் கூட அவர் எதிர்வினை ஆற்றவில்லை. இது அவரது இயலாமை அல்ல. கட்சி கட்டுப்பாடு குலைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அமைதியாக உள்ளார்.

பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் உள்ள இந்த நேரத்தில் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்தும் தகுதியும், தன்மையும் தினகரனுக்கு மட்டுமே உள்ளது. அவர் அந்த இலக்கை எட்டுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.