செய்திகள்

தினகரன் அதிரடியால் குழப்பம் - அ.தி.மு.க. 3 அணிகளாக உடைந்தது

அ.தி.மு.க. கட்சியில் தலைமை பதவிக்கான மோதலில் தினகரனின் அதிரடி அறிவிப்பையடுத்து இரண்டாக இருந்த அணிகள் தற்போது மூன்றாக உடைந்துள்ளது.

மாலை மலர்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கடந்த 7 மாதங்களாக அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

ஜெயலலிதாவின் நிழல்போல இருந்த சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராகி, முதல்-அமைச்சர் பதவிக்கும் குறி வைத்தார்.

இதன் காரணமாக பதவி விலக நேரிட்ட ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இது அ.தி.மு.க.வில் முதல் பிளவை ஏற்படுத்தியது. தனி அணியாக பிரிந்து சென்ற ஓ.பி.எஸ். பக்கம் 11 எம்.எல்.ஏ.க்கள் அணிவகுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்தார். ஆனால் அவரது முதல்-அமைச்சர் கனவு பலிக்கவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

இருப்பினும், தான் விரும்பும் ஆட்சி அமைய வேண்டும் என்று எண்ணிய அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக தேர்வு செய்ய வைத்தார். தனது அக்காள் மகனான டி.டி.வி. தினகரனை கட்சியின் துணை பொதுச் செயலாளராக்கினார்.

சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் டி.டி.வி.தினகரன் கட்சியை வழிநடத்தினார். ஆனால் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி தினகரனும் சிறை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் கடந்த மே மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னரே அ.தி.மு.க.வில் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக நகர தொடங்கியது.

சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் திடீரென அறிவித்தனர். தினகரனும் 60 நாட்கள் வரை அமைதி காக்கப் போவதாக கூறிவிட்டு சிறை சென்றார். இதன்பின்னர் சசிகலா அணி மெல்ல மெல்ல எடப்பாடி பழனிசாமி அணியாக மாறியது. இந்த அணியுடன் ஓ.பி.எஸ். அணியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் எடப்பாடி அணியை சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களும், சசிகலா-தினகரன் விவகாரத்தில் அவர்கள் பட்டும் படாமல் இருந்ததும் இணைப்பு முயற்சிக்கு தடை போட்டது. சசிகலாவை எதிர்ப்பது போல எடப்பாடி அணியினர் நாடகம் ஆடுகிறார்கள். எனவே இனி இணைப்பு சாத்தியமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இப்படி எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறாமலேயே இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கு ஓ.பி.எஸ். அணியினர் சசிகலா விவகாரத்தை காரணமாக கூறினாலும், யாருக்கு தலைமை பதவி என்கிற போட்டியும், முதல்-அமைச்சர் கனவுமே இணைப்பு பேச்சு முறிந்து போவதற்கு முக்கிய காரணமாகும்.

இப்படி, சசிகலா-தினகரன் இருவருமின்றி எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் ஆட்சி செய்து கொண்டே கட்சியை வழி நடத்தினர். இதனால் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந்தேதி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான தினகரன், அ.தி.மு.க.வில் இருந்து என்னை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது. மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து 37 எம்.எல்.ஏ.க்களை தனது பின்னால் அணி வகுக்க செய்து தினகரன் தனது பலத்தை காட்டினார். ஆகஸ்ட் 4-ந்தேதி வரை பொறுமை காக்கப்போவதாகவும் அதன் பின்னர் எனது அரசியல் பணிகள் வேகம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டிலேயே தினகரன் ஆலோசனை நடத்தியதால், அவரது இந்த அறிவிப்பை எடப்பாடி அணியினர், பெரிதாக எடுத்துக் கொள்ளாமலேயே இருந்தனர்.

தினகரன் இப்படியே பூச்சாண்டி காட்டிக் கொண்டே தான் செல்வார். எந்த முடிவையும் எடுக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தினகரனோ, கெடு முடிந்ததும் அரசியல் களத்தில் அதிரடியாக பாய்ந்தார்.

வருகிற 14-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவித்த தினகரன், தனது ஆதரவாளர்கள் 60 பேருக்கு கட்சி பதவியையும் வழங்கினார்.

தன்னை ஆதரித்த 37 எம்.எல்.ஏ.க்களில் 20 பேருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், செந்தமிழன், மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட 12 பேருக்கும் தினகரன் பதவி வழங்கி இருக்கிறார்.

இதனால் அ.தி.மு.க. 3 அணியாக உடைந்துள்ளது. ஏற்கனவே ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தலைமையில் 2 அணிகள் இருக்கும் நிலையில், தினகரன் தலைமையில் புதிய அணி உருவாகி உள்ளது. சசிகலாவும், தினகரனும் சிறை சென்ற பின்னர் எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்து விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த 2 அணிகளின் தலைமைகளும் காட்டிய பிடிவாதத்தால் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்து போனது. இதனையே தனக்கு சாதமாக்கி கொள்ள தினகரன் திட்டமிட்டுள்ளார். இதற்காகவே தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்கிற எண்ணம் தினகரனுக்கு இல்லை என்றும், கட்சியின் தலைமை பதவிக்குதான் அவர் ஆசைப்படுகிறார் என்றும் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். தினகரனின் எண்ணமும் அதுவாகவே இருக்கிறது. இதனை பலமுறை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் எடப்பாடி அணியினரோ கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படவே அவர்கள் விரும்புகிறார்கள்.

இதற்கிடையே தினகரன் வழங்கிய பதவியை ஏற்றுக் கொள்ள 4 எம்.எல்.ஏ.க்கள் மறுத்துள்ளனர். தினகரனுக்கு எதிராக அவர்கள் போர்க்கொடியை தூக்கி உள்ளனர். மாநில மகளிர் அணி இணை செயலாராக நியமிக்கப்பட்டுள்ள பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் அந்த பதவியை உதறிவிட்டு எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதே போல ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கதிர்காமு ஆகியோரும் தினகரன் அளித்த கட்சி பதவியை வேண்டாம் என்று உதறிவிட்டு எடப்பாடி பழனிசாமி பின்னால் அணிவகுத்துள்ளனர்.

தினகரன் பின்னால் கடந்த மாதம் 37 எம்.எல்.ஏ.க்கள் சென்றிருந்தனர். தற்போது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்துள்ளது. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேருக்கு தினகரன் பதவி வழங்கி அழகு பார்த்தார்.