சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி நடந்தது.
இதில் ஆளும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் தோல்வி அடைந்து 2-வது இடத்தை பிடித்தார். சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
இந்த தோல்வியால் அ.தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்தது. இதனால் கட்சிக்கு எதிராக செயல்படும் தினகரன் ஆதரவாளர்களை அடிமட்டத்தில் இருந்து நீக்கி வருகிறார்கள்.
தனது தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுசூதனன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவர்களை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுவரை 50 மாவட்டங்களில் இருந்து 3,500-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
வி.பி.கலைராஜன் (தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்), பாப்புலர் வி.முத்தையா (நெல்லை நகர மாவட்ட செயலாளர்), வி.புகழேந்தி (கர்நாடகா மாநில செயலாளர்), செய்தி தொடர்பாளர்கள் தீரண், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் செந்தமிழன், சி.சண்முகவேலு, இசக்கி சுப்பையா, வளர்மதி ஜெபராஜ், கே.டி.பச்சமால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், சி.வெங் கடாச்சலம், துரை மாணிக்கவேல், எஸ்.கே.செல்வம், துரைகோவிந்தராஜன், ஏ.டி.சரஸ்வதி, வானூர் கணபதி உள்ளிட்டோர் நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.
இதுதவிர பி.வெற்றிவேல் (வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்), என்.ஜி.பார்த்தீபன் (வேலூர் கிழக்கு), எம்.ரங்கசாமி, (தஞ்சை வடக்கு), தங்க தமிழ்ச்செல்வன் (தேனி மாவட்டம்) ஆகியோரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. மேலும் 7 மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்கள், கோவை எம்.பி. நாகராஜன், முன்னாள் எம்.பி. கோபால் ஆகியோரது கட்சி பதவியும் பறிக்கப்பட்டன.
அ.தி.மு.க.வுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் நிர்வாகிகள் நியமனம் தாமதம் ஆனது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னும் சில தினங்களில் சில நிர்வாகிகள் நீக்கப்படுகிறார்கள். அதன் பிறகு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினமான வருகிற 24-ந்தேதி அன்று அ.தி.மு.க. வுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. #tamilnews