செய்திகள்

தமிழகத்தில் விரைவில் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்தே தீரும்: தினகரன் பேச்சு

தமிழகத்தில் எடப்பாடி அரசு கவிழ்ந்து விரைவில் ஜெயலிதாவின் அரசு மலர்ந்தே தீரும் என மக்கள் சந்திப்பு பயணத்தின்போது டி.டி.வி. தினகரன் பேசினார்.

மாலை மலர்

தஞ்சை மாவட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கடந்த 2-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

திருவையாறு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தினகரன் மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார். திருவையாறு, பூதலூர், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சை பள்ளியக்ரஹாரம் ஆகிய இடங்களில் வேனில் நின்றப்படி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இன்றைய எடப்பாடி அரசு மக்கள் விரோத கொள்கைகளை கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறது. பதவியை பெரிதாக எண்ணிக்கொண்டு தமிழக நலன்களை காவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எல்லாம் கொண்டு வர ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக நலன்களை பாரதிய ஜனதா கட்சியிடம் அடமானம் வைத்து விட்டார்கள்.

இன்றைக்கு மணல் விற்பனைக்கு மதுரை கோர்ட்டு தடை விதித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். டாஸ்மாக் திறக்க உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். காவிரி பிரச்சனையில் தண்ணீர் கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏன் செல்லவில்லை?


தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு அமையும் நாள் விரைவில் வரும். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையப்போவது உறுதி. இந்த அரசு கவிழ்ந்து விரைவில் ஜெயலிதாவின் அரசு மலர்ந்தே தீரும். அப்படி ஜெயலலிதாவின் அரசு அமையும் போது செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். பூதலூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் திருக்காட்டுப்பள்ளயில் கலைக்கல்லூரி அமைக்கப்படும். திருக்காட்டுப்பள்ளியில் பைபாஸ் சாலை அமைக்கப்படும், வேளாண் சார்ந்த புதிய தொழில்நுட்ப முனையம் அமைக்கப்படும். திருக்காட்டுப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.