செய்திகள்

எடப்பாடி அரசை முடிவுக்கு கொண்டுவர தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்: தினகரன்

தமிழகத்தில் நடக்கும் எடப்பாடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் என மக்கள் சந்திப்பு பயணத்தின் போது தினகரன் பேசினார்.

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.

பாபநாசம், சாலியமங்கலம், அம்மாப்பேட்டை பகுதியில் திறந்தவெளி வேனில் நின்றபடி டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது நமக்கு சுயேச்சை சின்னம் கொடுக்கப்பட்டது. தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆளும் கட்சியையும், பிரதான எதிர்க்கட்சியையும் எதிர்த்து நான் வெற்றி பெற்றேன். தமிழகத்தில் நடக்கும் எடப்பாடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக மக்கள் காத்து இருக்கின்றனர். எப்போது தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைத்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவோம்.

எடப்பாடியும், ஓ.பி.எஸ்யும் இணைந்து புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்து விட்டு, மத்திய அரசின் காலடியில் சரணடைந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழக மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியை மக்கள் ஒரு போதும் இனியும் தொடர விரும்ப மாட்டார்கள். இன்னும் ஒரு மாதத்தில் இந்த ஆட்சி அகற்றப்படும், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்கள் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.

காவிரியில் நீர் கிடைக்காததால் டெல்டா மாவட்ட நெற்பயிர்கள் கருகி வருவதை இந்த அரசு கவனிக்கவில்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்போம். காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை தவிர வேறு தொழில்கள் செய்ய அனுமதிக்கமாட்டோம்.

ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைந்தவுடன் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.டி.வி.தினகரன் எம்.எல். ஏ.வுடன் மாநில பொருளாளர் ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் ஆகியோர் வந்தனர். #Tamilnews

SCROLL FOR NEXT