செய்திகள்

டி.டி.வி.தினகரன் 3-ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு செல்கிறார்

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு டி.டி.வி.தினகரன் 3-ந்தேதி (புதன்கிழமை) நன்றி தெரிவிக்கிறார்.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இதில் மதுசூதனன் (அ.தி.மு.க.), மருதுகணேஷ் (தி.மு.க.), கரு.நாகராஜன் (பா.ஜ.க.), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 59 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 77.42 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகமாக பெற்று அமோக வெற்றியும் பெற்றார். மேலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனனை தவிர, மற்ற அனைத்து வேட்பாளர்களையும் ‘டெபாசிட்’ இழக்க செய்தார்.

அவருடைய வெற்றி குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் வெவ்வேறு விதமான கருத்துகளை கூறினாலும், டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் என்னை தேர்ந்து எடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல், தன்னை அமோக வெற்றி பெற செய்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகின.

அந்தவகையில், முதல் கட்டமாக 3-ந்தேதி(புதன்கிழமை) ஆர்.கே.நகர் தொகுதி மக்களை பிரசாரத்தின் போது எவ்வாறு சென்று சந்தித்து வாக்குகள் கேட்டாரோ? அதேபோல், வீதி வீதியாக சென்று நன்றி தெரிவிக்க இருக்கிறார்.

ஒரே நாளில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து விட முடியாது என்பதால் முதல் கட்டமாக எந்தெந்த வட்டங்களுக்கு சென்று நன்றி தெரிவிக்கலாம் என்பது குறித்தும், அடுத்தக்கட்டமாக எப்போது சென்று நன்றி தெரிவிக்கலாம் என்பது குறித்தும் டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.