செய்திகள்

ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கம்: தினகரனின் அடுத்த அதிரடி என்ன?

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தோற்றுப்போய் விடுவார். அத்தோடு அவரது அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விடும் என்றே அ.தி.மு.க.வினர் கணக்கு போட்டனர். இதன் பின்னர் தினகரனை ஆதரிக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என்பதே அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளின் கணிப்பாக இருந்தது.

அதே நேரத்தில் அ.தி.மு.க. ஓட்டுகளை தினகரன் பிரிப்பார். நாம் வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க. நினைத்திருந்தது.

இப்படி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் போட்ட கணக்கு ஒரே நாளில் பொய்த்துப் போய் விட்டது. 2 கட்சிகளின் எண்ணங்களையும் தூள் தூளாக்கும் வகையில் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று தினகரன் சாதித்து காட்டினார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கலக்கம் அடைந்தனர். தினகரன் ஆதரவு நிர்வாகிகளை களையெடுக்க திட்டமிட்ட அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. அதே நேரத்தில் தினகரன் ஆதரவாளர்கள் 44 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டனர்.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மிகவும் உஷாராக காய் நகர்த்துவது தெரிய வந்துள்ளது. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்கினால் அவர்கள் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் என்கிற அந்தஸ்தை பெற்று விடுவார்கள் என்பதால் அதனை மட்டும் செய்யாமல் உள்ளனர்.

அதே நேரத்தில் தினகரன் ஆதரவாளர்களாக உள்ள கட்சி நிர்வாகிகள் பலரை நீக்கி இருப்பது தினகரன் ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.

தனது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கருத்து தெரிவித்த தினகரன் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே யாரையும் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இதற்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் மக்கள் அளித்த உற்சாகத்துடன் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் வெளியில் வந்து அளித்த பேட்டி கவனிக்கத்தக்கதாகவே மாறிப் போய் உள்ளது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறிப்பிட்ட தினகரன் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே மக்கள் விரும்புகிறார்கள். அதற்கான அங்கீகாரம்தான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு என்று கூறியுள்ளார்.

அதே போல எடப்பாடி அணியில் சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், பற்றி குறிப்பிடும்போது, நான் சட்டசபைக்கு சென்ற பின்னர் சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

தினகரனின் இந்த எண்ண ஓட்டங்களை பார்க்கும் போது அடுத்த அதிரடிக்கு அவர் தயாராகி விட்டாரோ? என்கிற கேள்வியும் பலமாகவே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் என்றும், எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பாளர்கள் என்றும் அவர் கூறுவதன் மூலம் ஏதோ ஒரு கணக்குடன் தினகரன் காய் நகர்த்துகிறரோ? என்றே எண்ணத் தோன்றுகிறது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டி எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

தினகரனுக்கு 50 எம்.எல்.ஏ.க்கள் வரை தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். அமைச்சர்கள் சிலரும் தினகரனை தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மூலம் அ.தி.மு.க.வுக்கும், எடப்பாடி ஆட்சிக்கும் நிச்சயம் தினகரன் சவாலாகவே இருப்பார் என்று மார்தட்டுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். என்ன செய்யப் போகிறார் தினகரன்? பொறுத்திருந்து பார்ப்போம்.