செய்திகள்

கர்நாடகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதா?- முரளிதரராவுக்கு தினகரன் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள முரளிதரராவுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி விவகாரத்தில் பிப்ரவரி 16-ந்தேதி வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் “ஸ்கீம்” ஒன்றை வகுத்து அதனை ஆறு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்திட கால அளவு வழங்கி உத்தரவிட்டது.

ஆனால் “ஸ்கீம்” என்ற வார்த்தையானது காவிரி மேலாண்மை வாரியத்தையே குறிக்கும் என தமிழக மக்கள் உரக்க சொல்லிக் கொண்டிருந்த சூழலில், ஆறு வார காலத்தை முழுமையாக விரயம் செய்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல், கால அவகாசம் முடிந்த நிலையில் “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாததுபோல மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், “காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை பாதிக்காத வகையில் பாரதிய ஜனதா கட்சி செயல்படும் என்றும், அது கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடப்படும்” என்று பேட்டி அளித்திருப்பது, மே 3-ந்தேதிக்குள் மட்டுமல்ல, மே 12-ந்தேதி நடக்கவிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னும், ஏன் 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் வரையிலுமே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று தீர்மானிக்கின்ற வேலை பாரதிய ஜனதாவுடையது இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது மட்டுமே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் கடமை.


அதை விடுத்து கர்நாடக தேர்தலுக்காக காவிரி விவகாரத்தை அரசியல் விளையாட்டாக பயன்படுத்தும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், பொறுப்பற்ற முறையில் ஒரு தலைப்பட்சமாக பேட்டி அளித்த அதன் தேசிய பொதுச்செயலாளர் முரளி தரராவிற்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரீம்கோர்ட்டில் இவர்கள் தாக்கல் செய்யப் போகும் வரைவு செயல் திட்டத்தின் அறிகுறியைத்தான் முரளிதரராவின் இந்த பேச்சு சுட்டிக்காட்டுவதாகத் தோன்றுகிறது.

மத்திய அரசுக்கு இப்பிரச்சனையில் உரிய அழுத்தத்தை பழனிசாமி கொடுப்பதாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மாநில அரசு என்று ஒன்று தமிழகத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகளின் இப்போக்கை முறியடிப்பது, நமது தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவதில்தான் உள்ளது.