செய்திகள்

அணி மாறினார் ஜக்கையன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக பேட்டி

தினகரன் அணியில் இருந்து விலகி வந்த எம்.எல்.ஏ. ஜக்கையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

மாலை மலர்

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் தேனி மாவட்டம் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையனும் ஒருவர். ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில், தினகரன் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து முதலமைச்சரை மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்காக புதுவை சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் வாகனங்களில் சென்னை திரும்பிய நிலையில், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் தனியாக பிரிந்து சென்று சபாநாயகர் தனபாலை சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அணி மாறிவிட்டதாக பேசப்பட்டது. முதலமைச்சருக்கு ஆதரவை வாபஸ் பெற்று ஆளுநரிடம் அளித்த கடிதத்தை திரும்ப பெற உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜக்கையன், முதலமைச்சர் பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

‘உட்கட்சி பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என தினகரனிடம் நான் கூறினேன். ஆனால், தினகரனின் நடவடிக்கை தி.மு.க.வுக்கு சாதகமாக மாறியதால் விலகி வந்தேன். முதலமைச்சராக பழனிசாமி தொடரவேண்டும் என விரும்புகிறேன்’ என்றார் ஜக்கையன்.