செய்திகள்

கட்டுமான துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு: குர்கானில் வீடு கட்டும் டிரம்ப்

உலகம் முழுவதும் கட்டுமான துறையில் கோலோச்சும் டிரம்ப் நிறுவனம் குர்கான் நகரில் 1200 ரூபாய் கோடி முதலீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டி விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் டவர்ஸ் கட்டுமான நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக அடுக்கு மாடி குடியிருப்புகள், சொகுசு ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களை கட்டி லாபம் ஈட்டி வருகிறது. இந்தியாவிலும், புனே, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் இந்நிறுவனம் இதற்கு முன்னதாக குடியிருப்புகளை கட்டியுள்ளது.

இந்நிலையில், குர்கான் நகரில் சுமார் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் நவீன சொகுசு குடியிருப்புகளை கட்ட டிரம்ப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எம்.3.எம் மற்றும் ட்ரைபேகா டெவலப்பர்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து டிரம்ப் நிறுவனம் இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் என்றும், வீடுகளை புக்கிங் செய்யும் முதல் 100 பேர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அதிபர் டிரம்ப்புடன் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் எம்.3.எம் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் பங்கஜ் பண்சால் கூறியுள்ளார்.

கட்டுமான துறையில் 46 சதவிகிதம் இருந்த அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் கட்டுமான துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் 100 சதவிகிதம் முதலீடு செய்ய முடியும் என்பதுடன் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.