வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கானோர் வேலையிழந்து தவிக்கின்றனர்.
கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் விதமாகவும், குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அதன்படி, 60 நாட்களுக்கு வெளிநாட்டவர்கள் குடியேற தடை விதிக்கும் நிறைவேற்று உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு வருவோரை இந்த உத்தரவு பாதிக்கும். ஆனால் ஏற்கனவே அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரை பாதிக்காது என கூறப்பட்டுள்ளது.
60 நாட்களுக்குப் பிறகு உள்ள நிலைமையை ஆராய்ந்த பின் குடியேற்ற தடையை நீக்குவதா?அல்லது நீட்டிப்பதா என முடிவு செய்யப்படும்.
அமெரிக்காவில் 8.48 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 47,676 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.