வாஷிங்டன்:
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கின.
நீண்ட காலமாக நடந்து வரும் இந்த போரில் பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு அரசு படைகளிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்தது. அதன் பின்னர் அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க வீரர்கள் படிப்படியாக தங்கள் நாட்டுக்கு திரும்பினர்.
தற்போது அங்கு சுமார் 8,400 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். எனினும் 15 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்தாலும், அரசு படைகளால் தலிபான்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அந்நாட்டின் 40 சதவீதம் பகுதிகள் தலிபான்களின் ஆதிக்கத்தின்கீழ் இயங்கி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் கை ஓங்கினால் அது அமெரிக்காவுக்கு ஆபத்தாக அமையும் என அமெரிக்க உளவு நிறுவனங்கள் கவலையில் உள்ளன. எனவே அங்கு அமெரிக்க படைகளை அதிகரிக்க வேண்டும் என அவை கருதியுள்ளன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை குறித்து ஜனாதிபதி டிரம்ப் மூத்த அதிகாரிகளுடன் கடந்த 18-ந் தேதி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, இன்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாடும் அதிபர் டிரம்ப் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 4 ஆயிரம் துருப்புகளை (ஒரு துருப்பு என்பது 16 முதல் 50 வீரர்களை உள்ளடக்கியது) அனுப்பி வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.