செய்திகள்

சி.ஐ.ஏ தகவலால் தீவிரவாத தாக்குதலை முறியடித்த ரஷ்யா: டிரம்ப்-க்கு புதின் நன்றி

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ அளித்த தகவலால் ரஷ்யாவில் நடக்க இருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக டிரம்ப்புக்கு புதின் போனில் நன்றி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

மாஸ்கோ:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும், டிரம்ப் வெற்றிக்கு ரஷ்ய உளவுத்துறை உதவியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக விசாரணையும் நடந்து வருகின்றது. இதே போல், டிரம்ப் - புதின் உறவில் சுமூக நிலையே காணப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ ரஷ்யாவுக்கு தகவல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தீவிர சோதனை நடத்திய ரஷ்ய பாதுகாப்பு படையினர் 7 பேரை தீவிரவாதிகள் என கைது செய்துள்ளது.

அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் திட்ட வரைபடங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ரஷ்ய போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, டிரம்ப்-ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்ட விளாடிமிர் புதின் இதற்காக நன்றி கூறியுள்ளார்.

இந்த தகவலை வெள்ளை மாளிகை மற்றும் ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.