செய்திகள்

அமெரிக்காவில் தீவிரவாதி துப்பாக்கிச் சூட்டுக்கு 50 பேர் பலி - அதிபர் டிரம்ப் இரங்கல்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இசை நிகழ்ச்சியின்போது தீவிரவாதி நடத்திய ஆவேச துப்பாக்கிச் சூட்டுக்கு 50 பேர் பலியாகியுள்ள நிலையில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேசினோ ஓட்டலில் நேற்று இரவு இசைக் கச்சேரி நடைபெற்றது. கச்சேரியை பார்க்க ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். அனைவரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், கூட்டத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவன், தான் வைத்திருந்த எந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினான். இதில், பலர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து சுருண்டு விழுந்தனர்.

துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது. கச்சேரியும் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை ஐம்பதாக உயர்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லாஸ் வேகாஸ் நகரில் நடந்த கொடூரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.