புதுடெல்லி:
உலக தொழில் முனைவோர்கள் மாநாட்டை நவம்பர் 28-ந்தேதி ஐதராபாத்தில் இந்தியா நடத்த உள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில் வாய்ப்புகளை பெறும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
அமெரிக்காவில் உள்ள தொழில் முனைவோர்களும் இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அமெரிக்காவில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மகள் இவாங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே இவாங்கா நவம்பர் மாதம் இந்தியா வருவது உறுதியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, இந்தியா வர இருக்கும் அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவாங்கா தலைமை ஏற்று வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அதை டிரம்ப் ஏற்றுக் கொண்டார்.
நேற்று அதை டிரம்ப்பும் இவாங்காவும் டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்து உறுதி செய்தனர். அந்த தகவலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.