வாஷிங்டன்:
தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் ஆறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்த அரசின் முடிவுக்கு எதிராக ஹவாய் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் டிரம்ப் தடை உத்தரவுக்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
அவற்றை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தடை உத்தரவில் மாற்றங்களை கொண்டுவந்து நடைமுறைபடுத்த உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து, மேற்கண்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் இருக்கும் பட்சத்தில் அவர்களது நெருங்கிய உறவுகளான தாய்-தந்தை, பிள்ளைகள், சகோதர-சகோதரிகள், வருங்கால கணவன் அல்லது மனைவி ஆகியோர் மட்டுமே அமெரிக்கா வர முடியும் என கூறி டிரம்ப் நிர்வாகம் புதிய தடை உத்தரவை பிறப்பித்தது.
மேலும் தாத்தா-பாட்டி உள்ளிட்ட மற்ற உறவினர்கள் யாரும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என அந்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புதிய தடை உத்தரவை எதிர்த்து ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டெரிக் வாட்சன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி டெரிக் வாட்சன், டிரம்ப் நிர்வாகம் குடும்பத்தின் நெருங்கிய உறவுகளை வரையறை செய்திருப்பதை கடுமையாக சாடினார். அதனை பொது அறிவுக்கு எதிரானது என குறிப்பிட்ட அவர் “தாத்தா-பாட்டி என்பவர்கள் குடும்பத்தின் மறுவடிவம் அவர்களை குடும்பத்தின் நெருங்கிய உறவில் சேர்க்காதது முட்டாள்தனம்” எனவும் கூறினார்.
அதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட 6 நாடுகளை சேர்ந்தவர்களின் தாத்தா-பாட்டி மற்றும் மற்ற உறவினர்களும் அமெரிக்கா வரலாம் என கூறி நீதிபதி டெரிக் வாட்சன் தீர்ப்பு அளித்தார். அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக வெளியான இந்த தீர்ப்பு அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி அமெரிக்க அரசின் சார்பில் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் விடுமுறையில் உள்ளதால் அவசரகால வழக்காக இந்த மனு நேற்று மாலை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.