செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து லாரிகள் ஸ்டிரைக் - பருப்பு, காய்கறி விலைகள் உயரும் அபாயம்

ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து லாரிகளின் வேலை நிறுத்த போராட்டத்தால் காய்கறிகள், பருப்பு, உணவு பொருட்கள், பண்டிகை கால பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

நாடு முழுவதும் ஒரு முனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வந்தது.

இதன் மூலம் உற்பத்தி வரி, சேவை வரி, சுங்க வரி, கூடுதல் சிறப்பு வரி உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக்கப்பட்டது.

மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் வரிகள் மற்றும் ஒரே பொருளுக்கு பல தடவை வரி விதிக்கும் நிலையை நீக்கி நுகர்வோர்கள் மீதான வரிச்சுமையை குறைப்பதே ஜி.எஸ்.டி.யின் பிரதான நோக்கமாகும். ஆனால் லாரி போக்குவரத்தில் இது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜி.எஸ்.டி.யில் லாரி சேவை தொடர்பாக பல தெளிவற்ற அம்சங்கள் உள்ளன. இது லாரி தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக லாரிகளை விற்கும் போதும், வாங்கும் போதும் 2 தடவை ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டிய துள்ளது. மேலும் தினசரி டீசல் விலை மாறுபாடு, சுங்க சாவடி கட்டணம் போன்றவையும் லாரி தொழிலில் இடர்பாடுகளை உருவாக்கியுள்ளது.

எனவே ஜி.எஸ்.டி. வரி பதிவை கட்டாயம் ஆக்கக்கூடாது, டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் தினசரி விலை நிர்ணயம் செய்வதை தவிர்த்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.

சுங்க சாவடிகளை மூடி விட்டு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்க வேண்டும் ஆகிய கேரிக்கைளை வலியுறுத்தி வருகிறார்கள். மத்திய அரசு இதை கண்டு கொள்ளாததால் இன்றும் (9-ந்தேதி) நாளையும் (10-ந்தேதி) நாடு முழுவதும் லாரிகளை இயக்காமல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி வேலை நிறுத்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் தொடங்கியது. இந்தியா முழுவதும் 93 லட்சம் லாரிகள், 50 லட்சம் தனியார் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு தெரிவித்தது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 5 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டன. வெளியூர்களில் இருந்து வரும் லாரிகள் நேற்று முதல் வரவில்லை.

நாடு முழுவதும் 93 லட் சம் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் தீபாவளி நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளது. தமிழகத்திற்குள் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மாநிலத்திற்குள்ளான சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது.

தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் காய்கறிகள், பழங்கள், ஜவுளி, பருப்பு, உணவு பொருட்கள், பண்டிகை கால பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து லாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

மத்திய அரசின் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளால் லாரி உள்பட சரக்கு வாகனங்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜி.எஸ்.டி. வரி, டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், ஆகியவற்றால் லாரி உரிமையாளர்கள் தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரியால் லாரி போக்குவரத்து தொழில் கடந்த 3 மாதங்களாக முடங்கி உள்ளது. மத்திய அரசு எங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் 4¼ லட்சம் லாரிகளும் பங்கேற்று உள்ளன. இதற்கு ஆதரவாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் லாரிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட் டுள்ளன. மினி சரக்கு வாகனங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நாளை மாலை 6 மணி வரை தொடரும். வெளி மாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லாததால் ஜவுளி, இரும்பு பொருட்கள், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தேங்கி உள்ளது. லாரி புக்கிங் ஆபீசுகளிலும் பொருட்கள் தேக்கம் அடைந்து மலைபோல் குவிந்துள்ளன.

பால், முட்டை, மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் மட்டும் இன்று இயங்குகின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நாளை முதல் கால் டாக்சிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

லாரி, மினி லாரி, தனியார் பஸ் மற்றும் சுற்றுலா வாகனங்களின் வேலை நிறுத்தம் நாளையும் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் லாரிகள் ஓடாததால் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே 2 நாட்களும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு இனியும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக் கட்டமாக கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.