செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் லாரிகள் ஸ்டிரைக்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குலாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. #BanSterlite #TalkAboutSterlite

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டையில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து புதுக்கோட்டை மெயின் பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கடை கள் இன்று அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குலாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதனால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த ஸ்டிரைக் காரணமாக 1000 க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் ஓடவில்லை. இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் பொருட்கள் தேக்கம் அடைந்தன. பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இன்று மாலை ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனிடையே பராமரிப்பு பணி காரணமாக கடந்த 26-ந்தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம் காவதியானதையடுத்து அதை புதுப்பிக்க ஆலை நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது.

இதைத்தொடர்ந்து விண்ணப்ப மனுவை பரிசீலித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்த மனுவை ஏற்காமல் உரிமத்தை புதுப்பிக்க மறுத்தது. இதனால் ஆலை தொடர்ந்து இயக்கப்படாமல் மேலும் 15 நாட்களுக்கு மூடப்படுவதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவித்தது.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஆலை முன்பாக திரண்ட அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதில் பணிபுரிபவர்களுக்கு மாற்று தொழில் தெரியாது.

ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என கூறினார்கள். தொழிலாளர்களின் போராட்டம் குறித்து தகவல் கிடைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடும் கிராம மக்கள் அங்கு வருவார்கள் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #BanSterlite #TalkAboutSterlite