விபத்து 
செய்திகள்

பல்லடம் அருகே விபத்தில் இளம்பெண் பலி

பல்லடம் அருகே விபத்தில் இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்பன்சாமி. இவரது மனைவி முத்து செல்வி(வயது 30).

கணவன்-மனைவி 2 பேரும் நேற்று இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ராயர்பாளையத்தில் இருந்து பல்லடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு மளிகை பொருட்கள் வாங்கி விட்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் நால்ரோடு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் முத்து செல்வி தூக்கி வீசப்பட்டு லாரியின் டயரில் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்பன்சாமி லேசான காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.