செய்திகள்

லிபியாவில் குண்டுவீச்சு: கடற்கரையில் பொழுதுபோக்க வந்த 5 பேர் பலி

லிபியாவின் தலைநகரான திரிபோலியில் உள்ள கடற்கரை பகுதியில் தீவிரவாதிகள் வீசிய குண்டு வெடித்ததில் குழந்தை உள்பட ஐந்துபேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திரிபோலி:

லிபியாவில் ஆள்கடத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக இங்குள்ள ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுக்களிடையே கடும் போட்டியும், சண்டையும் நிலவி வருகிறது. தலைநகர் திரிபோலி மற்றும் புறநகர் பகுதிகளில் சில குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது.

இவர்களில் ஒரு பிரிவினரை வேட்டையாடும் நோக்கத்தில் திரிபோலியில் உள்ள மிட்டிகா விமான நிலையத்துக்கு அருகாமையில் நேற்று பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடியாக களமிறங்கினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதன் எதிரொலியாக மிட்டிகா கடற்கரை பகுதி மீது நேற்று பின்னிரவு  தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். வெயிலின் தாக்கத்துக்கு பயந்து கடற்கரையில் காற்றார இருப்பதற்காக வந்திருந்தத ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் இந்த தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 18 பேர் திரிபோலியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT