இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை ‘தலாக்’ கூறும் ‘முத்தலாக்’ முறை அமலில் உள்ளது.
இது தொடர்பான வழக்கில் ‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மேலும், இஸ்லாமிய பழக்கவழக்கங்களின்படி பழங்காலத்தில் இருந்து இன்னொரு நடைமுறையும் வழக்கில் இருந்து வருகிறது. அதாவது, இஸ்லாமிய தம்பதியர் ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்த பின்னர், மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் ‘ஷரீஅத்’ சட்டத்தின்படி அதற்கென தனி வழிமுறை இருப்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, விவாகரத்தான பெண் தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால், நேரடியாக அவருடன் சேர்ந்து வாழ முடியாது.
அதற்கு முன்னதாக, இன்னொரு நபரை திருமணம் செய்துகொண்டு, அவருடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்துவிட்டு, பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, விவாகரத்துக்கு பின்னர் 40 நாட்கள் ‘இத்தாத்’ என்னும் விதவைக்கோலம் பூண்டு, அதன் பின்னரே தான் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் முன்னாள் கணவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்.
இந்த நடைமுறையை இந்தியாவில் உள்ள தற்கால இஸ்லாமிய பெண்களில் பலர் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் முத்தலாக் முறைக்கு ஆதரவாக அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், இதர சில அமைப்புகளும் அவற்றுக்கு எதிராக மத்திய அரசும் வாதிட்டு வருகின்றன.
சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பா.ஜனதா வாக்குறுதி அளித்தது.
இந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு உட்பட்ட தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜனதாவிற்கு இஸ்லாமிய பெண்கள் அதிகமாக வாக்களித்து உள்ளனர் என அரசியல் வல்லுநர்கள் தரப்பில் கூறப்பட்டது. முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்படும் பெண்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகிறார்கள், காவல் நிலையங்களிலும் இதுதொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையில், இந்த முத்தலாக் மற்றும் முன்னாள் கணவரை இரண்டாம் முறையாக மீண்டும் திருமணம் செய்துகொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் பலதார மணம் ஆகியவை தொடர்பாக இஸ்லாமிய
சட்ட வாரியமும், மத்திய அரசும் தங்களது நிலைப்பாட்டினை கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளன.
இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், டி.ஒய். சந்திரசூட், எஸ்.எகே. கவுல் ஆகியோரை கொண்ட ஐந்து நீதிபதிகள் அமர்வின்முன் வரும் 11-ம் தேதியில் இருந்து முழுவீச்சில் விசாரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனை வழங்க முன்னாள் மந்திரி சல்மான் குர்ஷித்துக்கு சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது.