செய்திகள்

அண்டார்டிகாவை பதம்பார்க்கும் பனிப்பாறைகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அண்டார்டிகா தீபகற்பத்தில் உருவாகி வரும் பெரிய அளவிலான பனிப்பாறை உடைந்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மாலை மலர்

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்கு பகுதியில் ஜூலை 10 மற்றும் 11ம் தேதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். இப்போது உருவாகியுள்ள பனிப்பாறை உலகின் மிக பெரிய அளவாக கணக்கிடப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள பனித் தகர்வால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பெரிய அளவிலான பனிப்பாறை தென் துருவத்தை நோக்கி நகரும் பட்சத்தில் கப்பல்களுக்கு பேராபத்து ஏற்படும்.

இந்த பனிப் பிளவு 200 கிலோமீட்டர் நீளத்திற்கு இருக்கிறது. இது சுமார் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர், அதாவது வேல்ஸின் பரப்பளவில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டதாக இருக்கும். இந்த இடத்தை கடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செண்டினல்-1 செயற்கைக்கோள்கள் இதை தெரிவிக்கின்றன. இந்த வெண்மையான அண்டார்டிகா கண்டம், ஆழ்ந்த குளிரின் இருளுக்கு மாறும் நிலையில், சென்டினலின் ரேடார் அதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு, லார்சன் பிளவு மென்மையான, நெகிழ்வான பனிப் பிராந்தியம் என்ற பிரிவிற்குள் வந்துவிட்டது. கடந்த மாதம் வரை இருந்த நிலை மாறி, திடீரென விரிசல் பிளந்துவிட்டது. இந்த புதிய விரிசலின் கிளைப் பகுதி நீட்சியடைந்து கடலை நோக்கி திரும்பியுள்ளது.

வடக்கில் உள்ள பனியடுக்கின் லார்சன் ஏ, லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால், அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின. இதேபோன்று லார்சன் சி பகுதியிலும் நிகழுமோ என்று விஞ்ஞானிகள் கவலையுடன் கண்காணித்து வருகிறார்கள். பனியடுக்கு உடைந்தால், இதே போன்ற உடைப்புகள் அண்டார்டிக் தீபகற்பம் முழுவதும் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் பிரின்ஸ் கஸ்டவ் சேனல், லார்சன் இன்லேட், லார்சன் ஏ, லார்சன் பி, வேர்டி, முல்லர், ஜோன்ஸ் சேனல், வில்கின்ஸ் போன்ற ஒரு டஜனுக்கும் அதிகமான பெரிய அளவிலான பனியடுக்குகள் உடைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.