திருச்சி:
தமிழகம் முழுவதும் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் சூளக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் ஆம்னி பஸ்சில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் ரகசிய தகவலில் கிடைத்த எண் கொண்ட ஆம்னி பஸ்சை எதிர்நோக்கி இருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் வழிமறித்தனர்.
பின்னர் பஸ்சில் ஏறி சோதனை போட்டனர். அப்போது அதில் பயணம் செய்த சந்தேக்ததிற்கு இடமான நபரின் வாலிபரின் பைகளை சோதனையிட்ட போது அதில் 8.1 கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை பஸ்சில் இருந்து இறக்கிய அதிகாரிகள் திருச்சியில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அகமது என்பது தெரியவந்தது.
அவர் இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து சென்னைக்கு கொண்டு சென்றது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.2 கோடியை 59 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அகமதுவை திருச்சி ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். #goldseized