துறையூர்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா கார் கூடல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று லாரி வாங்கி ஓட்டி வந்தார். இதற்காக மாதந்தோறும் கடன் தவணையை செலுத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் தவணை செலுத்தவில்லை.
சம்பவத்தன்று நிதி நிறுவன அதிகாரிகள் ரமேஷ் வீட்டிற்கு சென்றதோடு, அங்கிருந்த ரமேஷின் பெற்றோரிடம் உங்கள் மகன் லாரி வாங்கியதற்கான கடன் தவணையை சரியாக கட்டவில்லை. சரியாக கட்டாவிட்டால் லாரியை பறிமுதல் செய்து விடுவோம் என்று மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி அவரது பெற்றோர் ரமேஷிடம் கூறவே, அவர் மிகவும் மனமுடைந்தார்.
இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. சிட்டி பகுதிக்கு வந்த ரமேஷ், லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, அவரது மனைவி தமிழ்செல்விக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர், லாரிக்கான தவணை பணத்தை கட்ட முடியாததாலும், நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டி சென்றதாலும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன், குடும்பத்தை பார்த்துக்கொள் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி, அவரது சொந்த ஊரான துறையூர் வேங்கடத்தானூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ரமேஷ் விஷம் குடித்த நிலையில், லாரி ஸ்டீரிங்கில் படுத்தவாறு கிடந்தார்.
இதையடுத்து அவரை உடனே மீட்டு துறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்றிரவு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, கடிதம் ஒன்றையும் எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தார். அதில் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால் தற்கொலை செய்ததாக கூறியுள்ளார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.