திருச்சி:
திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் அருகே உள்ள பெரிய ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகள் தீனா மேரி (வயது 9), இவர் அருகே உள்ள பெரிய ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜான்பிரிட்டோ இருந்து வருகிறார். சம்பவத்தன்று பாடம் நடத்திக்கொண்டிருந்த போது தீனா மேரியும், அவரது அருகில் இருந்த மாணவியும் மாட்டிற்கு போட பயன்படுத்தும் ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ கோபமாக ஊசியை பிடிங்கி தீனா மேரி முதுகில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் தீனா மேரிக்கு வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டது. இது குறித்து பெற்றோரிடம் தீனா மேரி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தீனா மேரியின் தந்தை ஜோசப் இனாம்குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் இச்சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோவிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஏற்கனவே இந்த பள்ளியில் கட்டிடம் சரி இல்லை என கூறி மாணவி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அதன்படி அப்போது அப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்த கலெக்டர் கட்டிடம் மோசமாக இருந்ததால் அதை பூட்டி விட்டு அதற்கு மாற்று கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் அப்பள்ளியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ராசாமணிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை குறித்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ராசாமணி தெரிவித்தார். மேலும் பள்ளிக்கு சென்று விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் கூறினார். #tamilnews