மண்ணச்சநல்லூர்:
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் வாகனங்களில் அம்மன் படம் வைத்து அலங்கரிக்கப்பட்டு பூக்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சாற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று இந்நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருச்சி சமயபுரம் அருகே உள்ள பி.கே.அகரம் பகுதி பொதுமக்கள் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு பூக்களால் வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
இதையடுத்து டிராக்டரில் அம்மன் படம் வைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பி.கே.அகரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் ஏராளமான பூக்கூடைகளில் பூக்களை கொடுத்து அனுப்பினர்.
இரவு அங்கு வழிபாடு முடிந்ததும், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் சமயபுரம் கோவிலுக்கு டிராக்டரில் ஊர்வலமாக புறப்பட்டனர். இன்று அதிகாலை 5 மணியளவில் திருச்சி தச்சங்குறிச்சி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின்புறம் மோதியது.
அப்போது டிராக்டர் முன்புறம் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியதில் பி.கே.அகரம் பகுதியை சேர்ந்த ஜான்சன் துரை (வயது 55), முத்துசெல்வன் (29), கவியரசு (20) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிரியா, முத்தமிழ்செல்வன், மணி ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் பஸ்சை ஓட்டி வந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூச்சொரிதல் விழாவையொட்டி சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் பலர் பாத யாத்திரையாக செல்கின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் தங்கள் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பக்தர்கள் பலர் அதனை பொருட்படுத்தாமல் சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் அருகே கார் மோதியதில் சமயபுரம் கோவில் பக்தர்கள் சிலர் பலியாகினர். இந்தநிலையில் இன்று 3 பேர் பலியான சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது போன்று விபத்துக்கள் நிகழ்வதை தடுக்க பக்தர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.