திருச்சி:
அரியலூர் மாவட்டம் திருவிடைச்சேரி அருகே உள்ள கீழபளூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திருச்சி மத்திய சிறையில் நேற்று இரவு 7 மணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை சிறை அதிகாரிகள் அவசர அவசரமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனில்லாமல் இரவு 8 மணிக்கு செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரியலூரில் உள்ள செல்வராஜ் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருச்சி ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வராஜ் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே திருச்சி மத்திய சிறையில் கைதி திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாஜிஸ்தி ரேட்டு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் இச்சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு முதல் திருச்சி சிறையில் உள்ள செல்வராஜ் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் அவருக்கு அதிகமான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும் சரியாகததால் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிகிறது.