திருச்சி விமான நிலையம் 
செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த விக்னேஷ்(வயது 33), 373 கிராம் தங்கத்தை மோட்டார் உதிரி பாகங்களில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.14 லட்சத்து 45 ஆயிரத்து 375 .

இதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இளையான்குடியை சேர்ந்த முகமது மீரா(36) கடத்தி வந்த 199 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 71 ஆயிரத்து 125 ஆகும்.

மேலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, சென்னையை சேர்ந்த முபிஸ்அகமது கடத்தி வந்த 477 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்து 375 என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட 3 பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட மொத்தம் ரூ.40 லட்சத்து 64 ஆயிரத்து 875 மதிப்புள்ள ஒரு கிலோ 50 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.