செய்திகள்

அரசு மரியாதையுடன் விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது

விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் நாட்டுக்கு ஆற்றிய அரிய சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மாலை மலர்

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அர்ஜன் சிங். 98 வயதான அவருக்கு நேற்று முன்தினம் காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். டெல்லியில் உள்ள கவுட்டில்யா மார்க் பகுதியில் உள்ள அர்ஜன் சிங் வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் மற்றும் முப்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அர்ஜன் சிங் நாட்டுக்கு ஆற்றிய அரிய சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும். அன்றைய தினம் மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று காலை அர்ஜன் சிங்கின் இறுதி சடங்குகள் அவரது வீட்டில் நடைபெற்றன. அதன்பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடல் ஏற்றப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.