ஹோபார்ட்:
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஹோபார்ட் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெசன் ராயும், அலெக்ஸ் ஹேல்ஸ்சும் களமிறங்கினர். ராய் 9 ரன்களில் கேன் ரிச்சர்ட்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டேவிட் மலன் களமிறங்கினார். ஹேல்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் மலன்-உடன் கேப்டன் மார்கன் ஜோடி சேர்ந்தார். மார்கன் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மேக்ஸ்வெல் வீசிய பந்தில் வார்னர் வசம் பிடிபட்டு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சாம் பில்லிங்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து மலன்-உடன் டேவிட் வில்லி ஜோடி சேர்ந்தார். ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய மலன் அரைசதம் அடித்தார். அவர் 34 பந்துகளில் 5 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்தார்.
மேக்ஸ்வெல் வீசிய 16-வது ஓவரின் 3-வது மற்றும் 4-வது பந்துகளில் மலன் 50 ரன்களிலும், வில்லி 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடில் ரஷித் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கிறிஸ் ஜோர்டனும், டாம் குர்ரனும் களத்தில் இருந்தனர்.
குர்ரன், 17-வது ஓவரின் 2-வது பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் மார்க் உட் களமிறங்கினார். இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் 16 ரன்களுடனும், மார்க் உட் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் கிளின் மேக்ஸ்வெல் 3 விக்கெட்களும், ஆஷ்டன் அகர் 2 விக்கெட்களும், ஸ்டாயின்ஸ், ஆண்ட்ரூ டை, ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 156 ரன்களை இங்கிலாந்து இலக்காக நிர்ணயித்துள்ளது. #AUSvsENG #T20TriSeries