அம்பத்தூர்:
புரசைவாக்கம் கெல்லீஸ் பராக்கா சாலையில் வசித்து வருபவர் ரவிக்குமார். போரூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ் இலக்கியா. இவர்களது 3 வயது மகன் கணேஷ்.
நேற்று காலை ரவிக்குமார் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் மகன் கணேசை விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார்.
சிறிது நேரத்தில் அவர் தனது தந்தை பரமசிவம் மற்றும் மனைவி தமிழ் இலக்கியாவிடம் செல்போனில் பேசினார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் என்னை தாக்கி மகன் கணேசை கடத்தி சென்றுவிட்டனர். அவர்கள் ரூ. 5 லட்சம் பணம் கேட்கின்றனர் என்று தெரிவித்தார்.
இதனை நம்பிய தமிழ் இலக்கியா, பரமசிவம் ஆகியோர் ரூ. 5 லட்சம் ரொக்கத்துடன் காரில் சென்றனர். பின்னர் ரவிக்குமார் கடத்தல்காரர்கள், என்னை மட்டும் பணத்துடன் வரக் கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ரூ. 5 லட்சத்தை ரவிக்குமாரிடம் கொடுத்துவிட்டு தமிழ் இலக்கியாவும் பரமசிவமும் திரும்பி வந்தனர்.
அவர்கள் இதுபற்றி அயனாவரம் போலீசில் புகார் செய்தனர். உஷாரான போலீசார் உதவி கமிஷனர் சந்திரதாசன் தலைமையில் ரவிக்குமார் சென்ற காரை பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது மனைவியை செல்போனில் மீண்டும் தொடர்பு கொண்டு ரவிக்குமார், பெரவள்ளூரில் மகன் கணேசை கடத்தல்காரர்கள் என்னிடம் ஒப்படைத்துவிட்டனர். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டனர் என்று தெரிவித்தார்.
சந்தேகம் அடைந்த போலீசார் ரவிக்குமாரிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உல்லாச செலவு செய்வதற்காகவும், மனைவியிடம் இருந்து பணத்தை பெறுவதற்காகவும் கடத்தல் நாடகமாடியதாக தெரிவித்தார்.
மேலும் மகன் கணேசை பள்ளிக்கு அழைத்து செல்வதாக பெரவள்ளூரில் உள்ள நண்பர் ஒருவரது பேன்சி கடையில் விட்டுச் சென்றதாக கூறினார்.
இதையடுத்து ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது நண்பரிடம் விசாரணை நடந்து வருகிறது.